Monday, March 3, 2014

Pongu Sanieswaran Temple In Thirukollikadu Near Thiruvarur

   Hanuman Temple Tours Call us at + 91 90030 92893


திருக்கொள்ளிக்காடு பொங்குசனீஸ்வரர்

நவக்கிரக நாயகர்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் அருளால் செயல்பட்டு வருபவர் சூரியன் என்ற ரவி! இவரது வெப்பம் தாங்கமுடியாமல் இவரது மனைவி உஷத்தேவி தவித்தபோது,சந்தர்ப்ப சூழ்நிலையால் சாயாதேவியைத் திருமணம் செய்யும் சூழ்நிலை உருவானது;சாயாதேவியாலும் ரவியின் வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை;
எனவே,சூரியனாகிய ரவி தனது மனைவியர் உஷத்,சாயாதேவியுடன் சேர்ந்து அக்னி பகவானிடம் ஆலோசனைக் கேட்டார்கள்;அதற்கு அவர், “பூலோகத்தில் திருக்கொள்ளிக்காடு என்ற அக்னிபுரிக்குச் சென்று,அருள்மிகு மிருதுபாத நாயகி சமேத ஸ்ரீகொள்ளிக்காடர் என்ற அக்னீஸ்வரரை வழிபட்டால் இல்வாழ்க்கை சுகமளிக்கும்”என்று உபதேசித்தார்.
உடனே,மூவரும் திருக்கொள்ளிக்காடு வருகை தந்து,தொடர்ந்து சிவவழிபாடு செய்தனர்;இறைவன் அருகில்    அமைந்திருக்கும் சனி தீர்த்தத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி,சூரியனை நீராட வைத்தனர்;இதனால் ரவியின் வெப்பம் தணிந்தது;ரவியின் இல்லறம் சிறப்பாக இருக்கத்துவங்கியது;
உஷத் மூலமாக எமதர்மராஜா பிறந்தார்;சாயாதேவியின் மூலமாக சனீஸ்வரர் பிறந்தார்;
எமதர்மராஜாவும்,சனீஸ்வரனும் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்து சிவனருள் பெற்றனர்;இதன்படி,எமதர்ம ராஜாவுக்கு மனிதர்களுக்கு மரணம் தரும் பொறுப்பு கிட்டியது;சனீஸ்வரருக்கு அந்த மரண கர்த்தாவாகும் பொறுப்பும்,கர்மக்காரகனாக வான மண்டலத்தில் நவக்கிரகங்களில் ஒருவராகவும் செயல்படும் வரம் கிட்டியது;நம் ஒவ்வொருவரின் ஆயுளையும்,தொழிலையும் நிர்ணயிப்பவர் சனீஸ்வரர் ஆவார்.
யார் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்கிறார்களோ,அவர்களை ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன் என்று பைரவப்பெருமானிடன் சனீஸ்வரர் சத்தியம் செய்தப்பின்னரே,நவக்கிரகமாக செயல்பட அனுமதித்தார் ஸ்ரீகாலபைரவப்பெருமான்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும்,(முப்பத்துமுக்கோடி தேவர்கள்,மனிதர்கள்,ரிஷிகள்,துறவிகள்) உரிய தண்டனையை அவமானமாக,நோயாக,கடன்களாக,எதிரிகளாக,வழக்குகளாக வழங்குவதில் சனீஸ்வரர் பாரபட்சம் பார்ப்பதேயில்லை;நாம் இப்பிறவியில் செய்யும் தப்புக்களின் விளைவுகளை ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனியில் அனுபவிக்கிறோம்;இதனால்,ஈரேழு பதினான்கு உலகங்களிலும் சனீஸ்வரரின் பெயர் புகழ் பெற்றதோடு,அவரை நினைத்து அனைவருமே நடுங்கத் துவங்கினர்;சனீஸ்வரரை பாவக் கிரகம் என்றும்,தோஷக் கிரகம் என்றும் அனைவரும் தூற்றத் துவங்கினர்;
இதனால்,பைரவப் பெருமானிடம் சனீஸ்வரர் தனது நிலையை நேரில் சென்று முறையிட்டார்;தன்னை அனைத்து உலகத்தாரும் தூற்றுகிறார்கள்;தன்னை நினைத்து அனைவருமே பயப்படுகிறார்கள் எனவே எனக்கு நவக்கிரகப் பதவியும் வேண்டாம்;நீதிமான் பதவியும் வேண்டாம் என்று புலம்பினார்;
அவரிடம் பைரவப் பெருமான்,சனீஸ்வரரின் அவதாரநோக்கத்தை எடுத்துரைத்து,அந்தப்பதவிக்கு பொருத்தமான ஆள் நீ மட்டுமே என்று ஆறுதல் கூறினார்;அவரது பொறுப்புணர்ச்சியைப் பாராட்டினார்;தொடர்ந்து அவரை நவக்கிரகமாகச் செயல்படுத்திட ஊக்கப்படுத்தினார்;
உயிர்களைத் தண்டிக்க வேண்டியிருப்பதை பொறுக்காத சனீஸ்வரர்,வசிஷ்ட மகரிஷியை சந்தித்தார்;அவரின் ஆலோசனைப்படி,திருக்கொள்ளிக்காடு வந்தடைந்தார்;அங்கே இருக்கும் அக்னீஸ்வரரை நினைத்து கடும் தவம் புரிந்தார்;மனிதர்கள் தொடர்ந்து சிவவழிபாடு/சிவமந்திரஜபம் செய்து வந்தால்,குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்குரிய வரத்தை சிவகணங்கள் சூட்சுமமாக வந்து தரும்;நவக்கிரகத்தில் முக்கியமானவரான சனிபகவான்,சிவ வழிபாடு செய்தமையால் பைரவப் பெருமானே நேரடியாக வந்து அவரை பொங்குசனியாக  மாற்றி அருள் புரிந்தார்;
இங்கே ஸ்ரீகாலபைரவப் பெருமானின் நேராக பொங்கு சனீஸ்வரர் அருள்புரிந்து வருகிறார்;ஸ்ரீகாலபைரவப்பெருமானின் அருளாசியால் சனியானவர்,நன்மைகளை மட்டுமே தரும் பொங்கு சனீஸ்வரராக அருள்பாலித்து வருகிறார்;ஒவ்வொரு நொடியும் இங்கே இருக்கும் ஸ்ரீகாலபைரவப்பெருமானின் அருளாற்றல் பொங்குசனீஸ்வரருக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.சனிக்கிழமை சனி ஓரையில் அல்லது ராகு காலத்தில் வழிபடுபவர்களுக்கு பொங்கு சனீஸ்வரரின் அருள் முழுமையாகக் கிடைத்து வருகிறது.
சனீஸ்வரரின் கையில் இருக்கும் ஆயுதங்களை நீக்கிவிட்டு,ஏர்க்கலப்பையையும்,காகக்கொடியையும்,அருகில் காகத்தை வாகனமாகவும் ஆக்கி அருள்புரிந்திருக்கிறார்;கருநீல ஆடை அணிந்து,சனியால் ஏற்படும் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி தோஷங்களை நிவர்த்தி செய்யும் பொங்குசனியாக,சுபச்சனியாக அருள்பாலிக்கத் துவங்கியிருக்கிறார்.
சனிக்கிழமைகளில் இவருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன;இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் நிரப்பி அதை தானம் செய்யலாம்;கருப்பு ஆடையை பொங்கு சனீஸ்வரருக்கு அணிவிக்கலாம்;நல்லெண்ணெய் தீபம் ஏற்றி,எள் சாதம் தானம் செய்யலாம்;கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்;
சனீஸ்வரரின் அம்சமான உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானம் செய்யலாம்;எள் உருண்டை தானம் செய்யலாம்;கருப்புத் துணிகளை தானம் செய்யலாம்;
சனீஸ்வரரின் சுபாவங்களான விரக்தி,தனிமை,தனது இப்போதைய நிலையை நினைத்து தன்னிரக்கப்படுதல்,எதிலும் சுறுசுறுப்பு இல்லாத சூழ்நிலை போன்றவைகள் ஏழரைச்சனி நடைபெறுபவர்களுக்கு இருக்கும்;